×

இனி உற்பத்தி, விநியோகம் இல்லை கோவிஷீல்டு தடுப்பூசியின் சகாப்தம் முடிவுக்கு வந்தது: அஸ்ட்ராஜெனகா திடீர் அறிவிப்பு

புதுடெல்லி: இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனமும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தன. இந்த தடுப்பூசி மேற்கத்திய நாடுகளில் வாக்ஸ்செவ்ரியா என்றும் இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரிலும் வழங்கப்பட்டன. இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியை புனேவை சேர்ந்த சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வழங்கியது. இந்தியாவில் 220 கோடிக்கும் அதிகமாக செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளில் பெரும்பாலானவை கோவிஷீல்டு. இந்த தடுப்பூசி குறித்து ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், தங்களின் கொரோனா தடுப்பூசியால் அரிதான சந்தப்பங்களில் மூளையில் ரத்தம் உறைதல் மற்றும் ரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைதல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதை அஸ்ட்ராஜெனகா நிறுவனம் சமீபத்தில் ஒப்புக் கொண்டது. இது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அஸ்ட்ராஜெனகா நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘பலதரப்பட்ட, புதுப்பிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் ஏராளமாக கிடைத்து வருவதால், வாக்ஸ்செவ்ரியாவின் தேவை குறைந்துள்ளது. எனவே இனி எங்களின் தடுப்பூசி உற்பத்தி செய்யப்படவோ விநியோகிக்கப்படவோ மாட்டாது. எங்களின் தனிப்பட்ட மதிப்பீட்டின்படி, தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட முதலாம் ஆண்டில் உலகம் முழுவதும் 300 கோடி டோஸ்களை விநியோகித்து 65 லட்சம் மக்களின் உயிர்களை நாங்கள் காப்பாற்றி உள்ளோம்’ என கூறப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரையில், 2021 டிசம்பர் மாதமே உற்பத்தி நிறுத்தப்பட்டதாக சீரம் நிறுவன செய்தி தொடர்பாளர் கூறி உள்ளார்.

The post இனி உற்பத்தி, விநியோகம் இல்லை கோவிஷீல்டு தடுப்பூசியின் சகாப்தம் முடிவுக்கு வந்தது: அஸ்ட்ராஜெனகா திடீர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : GovShield ,AstraZeneca ,New Delhi ,UK ,AstraZeneca Pharmaceuticals ,Oxford University ,GoviShield ,India ,Pune ,Dinakaran ,
× RELATED கோவிஷீல்டு மட்டுமல்ல…. கோவாக்சின்...